சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பிரமாண்ட பேரணி: கவர்னர் ஆர்.என்.ரவி-சைதை துரைசாமி பங்கேற்பு
- தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- போதை விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
தென்காசி:
வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் இன்று சங்கரன்கோவிலில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இன்று காலை சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி மற்றும் ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேளதாளங்கள் முழங்க பேரணியானது பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை வரை 2 கிலோ மீட்டர் சென்றடைந்தது. பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதற்காக சங்கரன்கோவில் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி முதலில் சங்கர நாராயணர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். அவரோடு ஜோகோ முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற பேரணியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி, ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர். சேகர் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்த பெண்கள், இளைஞர்கள் வாய்ஸ் ஆப் தென்காசி இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். அவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்ட மேடையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போதை விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தின் போது அனைவரும் போதை பொருட்களுக்கு எதிராக ஒருசேர உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.