மங்கலம்பேட்டையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.
மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.
கடலூர்:
போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அறி வுறுத்தலின் பேரில், தமிழ்நாடு காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டையில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காளமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி விழிப்புணர்வு பேரணியானது மங்கலம்பேட்டை கடைவீதி, மெயின் ரோடு வழியாக சென்று புல்லூர் சோதனைச் சாவடியை சென்றடைந்தது. இந்த பேரணியின்போது, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், தனிப்பிரிவு தலைமைக் காவலர் ராஜசேகர், பள்ளி ஆசிரியர்கள் பாபாஜி, விசாலாட்சி, சங்கர், சுடர் ஒளி, அனிதா உள்ளிட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.