கொங்கராயகுறிச்சியில் சேதப்படுத்தப்பட்ட தொல்லியல் களம்
- கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.
- ஆதிச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் இந்த மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ளது கொங்கராயக்குறிச்சி கிராமம். வரலாற்று தொன்மை வாய்ந்த இந்த ஊர் ஆதிச்சநல்லூரில் 1899-ம் ஆண்டு அகழாய்வு நடத்திய அலெக்சாண்டர் ரியாவால் கண்டறியப்பட்ட 37 தொல்லியல் களங்களில் ஒன்றாகும். மேலும், இந்த ஊரே ஆதிச்சநல்லூர் இடுகாட்டில் புதைந்த மனிதர்கள் வாழ்ந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ரியா குறிப்பிட்டுள்ளார்.
கள ஆய்வு
இத்தகைய சிறப்பு வாய்ந்த கொங்கராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற இடங்களில் அதிக அளவில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது. எனவே, இவ்வூரில் தொல்லியல்துறை களஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகின்றது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக இவ்வூரின் வயல்வெளியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பிவிட தோண்டிய பள்ளத்தில் இருந்து எலும்புகளுடன் தொல் பொருட்களும் வெளிவந்தன. இதனை வியப்புடன் கண்ட பொதுமக்கள், குவிந்து கிடக்கும் எலும்புகளை பார்த்து அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதனை அடுத்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் மத்திய தொல்லியல் துறையினர் சார்பில் இவ்விடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களின் வாழ்விடத்தை கண்டறிய மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் இந்த மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கொங்கராயகுறிச்சியில் ஏற்கனவே சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரும் மீண்டும் அந்த இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தோண்டியுள்ளனர். இதில் அந்த பகுதியில் உள்ள மணலில் புதைந்திருந்த பானைகள், வாழ்விடப்பொருட்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.