அரியலூரில் தயார் நிலையில் 39 நிவாரண முகாம்கள்
- அரியலூரில் 39 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது
- துணை கலெக்டர் தலைமையில் 5 குழுக்கள்
அரியலூர்:
தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடு த்ததையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் 39 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியக்யப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த12 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இவர்கள் மூலம் 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பதற்றமான பகுதிகளை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை எடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
பதற்றமான பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் 39 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. பிற இடங்களில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்திட வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள 28 நியாய விலை கடைகளில் பொதுவிநியோகத்திட்ட உணவுப்பொருள்களை கூடுதலாக நகர்வு செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திட நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புக் கொள்ளலாம்.
இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 - 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கைப்பேசி எண் 9384056231 என்ற எண்ணுக்கு கட்ச்செவி மூலம் புகார் மற்றும் தகவல் அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.