அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.15 கோடியில் சாலை தரம் உயர்த்துதல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
- அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.15 கோடியில் சாலை தரம் உயர்த்துதல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், குழுமூரில் நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு மூலம் குழுமூர்-அயன்தத்தனூர் சாலை தரம் உயர்த்துதல் பணியினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ் இச்சாலை தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த சாலை 5 கண்களை உடைய உயர்மட்ட பாலமும், வடிகால் வாய்க்கால் பணியையும் உள்ளடக்கியது. இப்பணி ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
குழுமூர்-அயன்தத்தனூர் சாலை தரம் உயர்த்துவதன் மூலம் வங்காரம், அயன்தத்தனூர், குழுமூர், சித்துடையார், வஞ்சினாபுரம், நல்லநாயக்கபுரம், அங்கனூர், சன்னாசிநல்லூர், முல்லையூர், ஆர்.எஸ்.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழன்குடிகாடு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகுந்த பயன்பெறுவார்கள்.நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்டப்பொறியாளர் வடிவேல், உதவிக்கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப்பொறியாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.