அரியலூரில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி
- ரூ.63 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
அரியலூர்,
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2500 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதி வாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டில் (2022-2023) சுமார் 150 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.அந்த வகையில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம்-மதனத்தூர் இருவழிச்சாலையை 21 கி.மீ. வரை அகலப்படுத்துதல், 26 கி.மீ. நீளத்தில் அமையப்பெற்ற சிறுபாலத்தை திரும்பக் கட்டுதல், வடிகால், தடுப்புச்சுவர் மற்றும் சென்டர் மீடியன் கட்டுதல், கல்வெட்டுகள் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
ரூ.63 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணியினை கூவத்தூர் கிராமத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்திராண்டி, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.