உள்ளூர் செய்திகள்

பசுந்தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்க ஏற்பாடு

Published On 2023-10-16 10:10 GMT   |   Update On 2023-10-16 10:10 GMT
  • தென்னிந்திய தேவை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தகவல்
  • 15 நாட்களுக்கு ஒருமுறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்க அறிவுறுத்தல்

அருவங்காடு,

நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக அங்கு 110 தொழிற்சாலைகளும், 35க்கும் மேற்பட்ட பெரிய எஸ்டேட் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு தேயிலைதோட்ட கழகம் மற்றும் இன்கோசர்வ் மூலமாகவும் தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பசுந்தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது:-

தேயிலை விவசாயிகள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பசுந் தேயிலையை அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அவர்கள் கத்தியை பயன்படுத்தக்கூடாது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமப்புற விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

மேலும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை வழங்குவதற்கான முயற்சிகளை தென்னிந்திய தேவை வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.14.90 வழங்க வேண்டுமென தேயிலை வாரிய விலை நிர்ணய கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது. எனவே 7 மற்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தேயிலை வாரியம் நிர்ணயித்ததைவிட, தரமான இலைக்கு கூடுதல் விலை கிடைக்கும். எனவே சிறு-குறு விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News