நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் கோவில் ஆகும்.
- இன்று நடைபெற்ற கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் கோவில் ஆகும். சிவபெருமான் திரு நடனமாடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள இக்கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 10 நாட்களும் சுவாமி சன்னதி அருகே அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதியில் திருவெண்பாவை பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா வருகிற 6-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு தாமிரசபை மண்டபத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொடி பட்டமானது பல்லக்கில் கோவில் உட்பிரகாரத்தில் வீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.