கும்பகோணத்தில், 14 பெருமாள்கள் ஒருசேர எழுந்தருளி கருடசேவை நிகழ்ச்சி
- இவர்களுக்கு நேரே தனி பந்தலில் ஆஞ்சநேயர் எழுந்தருளி எதிர்சேவை சாதித்தார்.
- ஒரே நேரத்தில் 14 பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுவாமிமலை:
ஆண்டுதோறும் சித்திரை மாத வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 14 வைணவ கோவில்களிலிருந்து 14 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் புறப்பட்டு ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
14 கருட சேவை நிகழ்ச்சி
அதேபோல், இந்த ஆண்டு கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று மதியம் நடந்தது.
இதில் சாரங்கபாணி, சக்ரபாணி, ஆதிவராக பெருமாள், ராமசாமி, ராஜகோபாலசாமி, அகோபில மடம் லட்சுமி நரசிம்ம பெருமாள், சீனிவாசப்பெருமாள், கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், வேணுகோபாலசாமி, பட்டாச்சாரியார் தெரு நவநீதகி ருஷ்ணன், சோலைப்பன்தெரு ராமசாமி, மேலக்காவேரி வரதராஜபெருமாள், பிர்மன்கோவில் வேதநாராயண பெருமாள், பிர்மன்கோவில் வரதராஜ பெருமாள் என 14 கோவில்களில் இருந்து உற்சவ பெருமாள்கள் தனித்தனி கருட வாகனங்களில் ஒருசேர ஒரே இடத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மகா தீபாராதனை
இவர்களுக்கு நேரே தனி பந்தலில் ஆஞ்சநேயர் எழுந்தருளி எதிர்சேவை சாதித்தார்.
பெருமாள்கள் கருட வாகனத்தில்எழுந்த ருளியவுடன், திருமங்கை யாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஒரே நேரத்தில் 14 பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதனை காண கும்பகோணம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.