உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் பேசினார்.

தஞ்சையில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-11-24 09:43 GMT   |   Update On 2023-11-24 09:43 GMT
  • தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
  • விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதி 46,47, 48,49- வது வார்டிற்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர், மாநகர செயலாளர் என்.எஸ். சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பகுதி பொறுப்பாளர் டி. மனோகரன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அ.தி.மு.க. தனித்துவம் வாய்ந்த கட்சியாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி திறம்பட வழி நடத்தி வருகிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் நிலம் எடுப்புக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தி.மு.க அரசு குண்டர் சட்டம் போட்டது.

உடனடியாக இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டம் தெரிவித்து தானே தலைமை தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

அதன் பிறகே விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டது.

இதேபோல் தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு, வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இப்படி மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அடுத்து மக்களின் பேராதரவோடு மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும். எனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் சரியான முறையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பகுதி துணைச் செயலாளர் சிவகுமார், வட்ட செயலாளர்கள் கிருபாகரன் (46-வது வார்டு), மோகன் (47-வது வார்டு), பழனிவேல் (48-வது வார்டு), அண்ணாதுரை (49-வது வார்டு), தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மருத்துவக் கல்லூரி பகுதி சிறுபான்மை பிரிவு சையது முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News