நல்லிணக்கத்தை விரும்பும் ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள்; முதல்-அமைச்சர் பேச்சு
- 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
- தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
முன்னதாக தருமபுரம் ஆதீனம் சார்பில் முதல்-அமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தருமை ஆதீன வானொளி, தொலைக்காட்சி ஒளி ஒலி பதிவகத்தை திறந்து வைத்தும், பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டார்.
பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில்:-
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது, முதல்-அமைச்சர் ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.2 லட்சம் கொடுத்து திருப்பணிகளை தொடங்கி வைத்தார் என்றார்.
தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்:-
தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.
நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல கோவிலின் விடியலுக்கும் சாட்சியாக உள்ளது என பல்வேறு மடாதிபதிகள் பாராட்டி வருகிறார்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசாக தமிழக அரசு உள்ளது.
தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் பல்வேறு ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது போதுமானது.
விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் மகாபாரதி, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், ஆதீனம் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், திருக்கடையூர் கோவில் கூடுதல் கண்காணிப்பாளர் மணி உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மாணவ- மாணவிகள், ஆதீனம் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.