காரமடையில் ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்துவது போல் நடித்து விவசாயியிடம் ரூ.48 ஆயிரம் 'அபேஸ்'
- மகளுக்கு பணம் அனுப்ப சென்றவரை ஏமாற்றி பணத்தை அபகரித்த வாலிபர்
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவிர விசாரணை
கோவை,
கோவை சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்தவர் சிவசாமி (வயது 62). விவசாயி.
சம்பவத்தன்று இவர் காரமடை ரோட்டில் உள்ள வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் ரூ.49,500 பணம் போடுவதற்காக சென்றார். அவருக்கு பணம் போட தெரியாததால் அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவரிடம் விவசாயி சிவசாமி ரூ.49,500 பணத்தை கொடுத்து தனது மகளின் வங்கி கணக்கில் போடுமாறு கூறினார்.
இதனையடுத்து அந்த வாலிபர் பணம் போடுவது போல நடித்து ரூ.48,500 பணத்தை போட்டாச்சு, ரூ.1000 மட்டும் திரும்பி வந்து விட்டதாக கூறி பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.
வீட்டிற்கு சென்ற சிவசாமி தனது மகளை தொடர்பு கொண்டு பணம் வந்து விட்டதா என கேட்டார். அதற்கு அவர் வரவில்லை என்று கூறி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சிவசாமி வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது கணக்கை ஆய்வு செய்த அதிகாரிகள் பணம் செலுத்தப்படவில்லை என கூறினர்.
உதவி செய்வது போல நடித்து வாலிபர் ஏமாற்றியதை உணர்ந்த விவசாயி இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் பணம் போடுவது போல நடித்து விவசாயிடம் ரூ.48,500 பணத்தை ஏமாற்றி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.