எலக்ட்ரீசியன் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
- இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
- இதில் காயம் அடைந்த பாபு, பிரவீன்குமார், நாகேஷ் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓசூர்,
ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகரை சேர்ந்தவர் பாபு (வயது 19). எலக்ட்ரீசியன். அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (32). கடந்த 18-ந் தேதி பாபு மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மெடிக்கல் கடை அருகில் சென்ற போது மோட்டார்சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இதனால் பாபு மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தினார். அந்த நேரம் அங்கு வந்த சுரேஷ் எதற்காக இங்கே மோட்டார்சைக்கிளை நிறுத்தினாய் என கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பாபுவை சுரேஷ், பேசுவதற்காக அழைத்தார். அந்த நேரம் பாபுவும், அவரது நண்பர்கள் பிரவீன்குமார் (19), நாகேஷ் (20) ஆகியோர் சென்றனர். அப்போது சுரேஷ் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சந்தீப் (22), சிவக்குமார் (23), பசவராஜ் ஆகியோர், பாபுவையும், அவரது நண்பர்களையும் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த பாபு, பிரவீன்குமார், நாகேஷ் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அது தொடர்பாக பாபு கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் சுரேஷ், சந்தீப், சிவக்குமார், பசவராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.