சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
- சேலத்தில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
- எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் மெயின் ரோடு டி.எம்.செட் பகுதியை சேர்ந்த மோகனா மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, அவர்கள் நுழைவு வாயில் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதை பார்த்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிந்தராஜ் கூறும்போது:-
எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர். மேலும் நிலத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ வழியில்லாமல் இருக்கும் நாங்கள் இறப்பதே மேல் என நினைத்து, தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றார்.