கோவை கலெக்டர் அலுவலகம் அருகே 2 ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி
- யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? என போலீசார் விசாரணை.
- இந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு தினந்தோறும் பல்வேறு குறைகளை தெரிவிப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வசதிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ, சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். சென்டர்கள் உள்ளது.
இந்த ஏ.டி.எம்.களில் பொதுமக்களும், ஊழியர்களும் பணம் எடுத்து சென்று வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல பொதுமக்கள் சிலர் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றனர். அப்போது, ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அருகே இருந்த சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து காணப்பட்டது.
இதையடுத்து போலீசார், அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிரா மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 ஏ.டி.எம்.களில் கற்களை கொண்டு வீசி கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஏ.டி.எம் எந்திரம் பாதுகாப்பாக உள்ளது. அங்கு பணம் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.