ஆடி கிருத்திகை: திருத்தணியில் 5 நாட்கள் சிறப்பு தரிசனம் ரத்து
- ஆடி கிருத்திகை திருவிழா 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
- காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளன.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு காமிராக்கள் 160 இடங்களிலும், பொதுதகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட உள்ளன.
கூடுதல் பஸ்கள் இயக்கவும், 4 தற்காலிக பஸ்நிலையங்களும், சிறப்பு ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவுக்கு 200 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி 27-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு கட்டணம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சந்திரன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.