உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் `ஆட்டோ ரேஸ்': வீடியோ வைரல்

Published On 2024-06-18 08:12 GMT   |   Update On 2024-06-18 08:12 GMT
  • விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.
  • வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

பொன்னேரி:

சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை 6 வழி சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை செங்குன்றம், பொன்னேரி மீஞ்சூர், திருவொற்றியூர், பஞ்செட்டி ஆகியவற்றுடன் இணைக்கிறது.

மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் எவ்வித தடையின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும்.

இந்த சாலைகளில் தடையை மீறி வாரவிடுமுறை நாட்களில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் தொடர்ந்து நடந்து வருகின்றன.போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அவ்வப்போது ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே அருமந்தை என்ற பகுதியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மணி, ஷாம் சுந்தர் ஆகிய 2 பேர் பலியானார்கள்.

மேலும் மோகனகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெபேயர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.

மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டு சீறி பாய்ந்து செல்வதும் அதன் பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

ரேசின் போது ஆட்டோ ஒன்று கவிழ்ந்த போது அதனை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில் 2 பேர் பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே ஆட்டோ ரேஸ் செல்வதை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டே ரேஸ் செல்வதை பார்க்கும் போதே அச்ச உணர்வு ஏற்படும் வகையில் சீறிப்பாய்கின்றன.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சாகச ரேசை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News