ஆவடி அருகே ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்
- திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.
- ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
ஆவடி:
ஆவடி அருகே உள்ள நடுக்குத்தகையில் சுமார் 51.ஏக்கர் நிலபரப்பில் பெரியஏரி உள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஏரி நிலத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள், வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இதையடுத்து திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரணையில் 391, வீடுகள் சுமார் 15 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது.
ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இதற்கிடையே தற்போது மேலும் புதிதாக ஏரியை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி இருப்பதாக பொதுப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரின் உதவியுடன் நடுக்குத்தகை பெரிய ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.