ஆவணி முதல் முகூர்த்த நாள்; தஞ்சையில், பூக்களின் விலை கணிசமாக உயர்வு
- திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
- தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது.
இங்கு திண்டுக்கல், ஓசூர் , நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்கள் வாங்குவர்.
விஷேச தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சற்று அதிகரிக்கும். வரத்து , விளைச்சல் குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.
இந்த நிலையில் தற்போது ஆவணி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகளவில் தேவைப்பட்டது. இதனால் இன்று தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலையும் சற்று அதிகரித்தது.
அதன்படி மல்லிகை கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேப்போல் முல்லை கிலோ ரூ.800, ஆப்பிள் ரோஸ் ரூ.250, கனகாம்பரம் கிலோ ரூ.800, சம்பங்கி ரூ.600, அரளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன.
நேற்றும் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்தது. தொடர்ந்து 2 நாட்களாகவே பூக்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
இது பற்றி வியாபாரிகள் கூறும்போது, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகளவில் உள்ளதால் சுபநிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கும். இதனால் பூக்களின் தேவையும் அதிகரிக்கும்.
அதன் அடிப்படை யிலேயே இன்று பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது . பூக்களின் வரத்தும் பரவலாக உள்ளது என்றனர்.