உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு

Published On 2023-05-25 09:17 GMT   |   Update On 2023-05-25 09:17 GMT
  • தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது
  • மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட நகரம், ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணியில், 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட நகர். ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.

அதுபோல, 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, கல்வித்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2 வாரங்கள் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார கல்வித்துறை சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

இதையடுத்து 2-ம் கட்டமாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள், பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் குறித்து கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள ஆசிரியர், சிறப்பாசிரியர், சத்துணவு பணியாளர், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதிலும், கிராமப்புறங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடர்ந்து நடக்கிறது. அப்போது ஆசிரியர்கள் பெற்றோர்களை சந்தித்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையிம் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழி வகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நோக்கத்தில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது. இப்பணி வரும் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன், 5 வயது நிறைவடை்ந்த பள்ளி வயதுள்ள குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் சேர விருப்பமுள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அருகேயுள்ள பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில், கல்விக்காக தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கியதுடன், பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றனர்.

Tags:    

Similar News