ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஓராண்டு நிறைவையொட்டி நாங்குநேரி முதல் களக்காடு வரை விழிப்புணர்வு நடைபயணம் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தகவல்
- வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.
- நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.
நெல்லை:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டார்.
இம்மாதம் 7-ந் தேதி, அந்த நடைபயணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.
இதையொட்டி, நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக விழிப்புணர்வு பிரசார இயக்கமும், நடை பயணமும் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கேட்டுக்கொண்டனர்.
இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், மாபெரும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.
நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து, இரவு 8 மணிக்கு, அங்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ராகுல்காந்தி எம்.பி. கடந்த ஆண்டு மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, அந்த வெற்றி யாத்திரை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், மத்திய பாரதீய ஜனதா அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும் விழிப்புணர்வு பிரசார இயக்க நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.
நாங்குநேரியில் தொடங்கி களக்காடு காந்தி சிலை முன்பு நிறைவு பெறும் இந்த நடைபயணத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கி றார்கள்.
இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.