தருமபுரி சனத்குமார் நதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
- கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
- மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள சனத்குமார் நதியின் ஆற்றுப்படுக்கை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் செல்லும் பாதை முழுவதும் தடம் தெரியாமல் இருந்து வருகிறது.
தற்போது இந்த நதியில் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அதே போல் ஆற்று படுக்கையில் குப்பைகளை கொட்டுவதால் கழிவு நீர் தொட்டியாக மாறி நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, ஆறு மற்றும் குளங்களை தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் வத்தல்மலை என்ற மலையில் இருந்து தான் சனத்குமார் நதி உருவாகி வருகிறது.
இந்த நதியில் இலளிகம், மாதேமங்கலம், அன்னசாகரம், அதியமான் கோட்டை, உள்ளிட்ட ஏரிகள் மற்றும் கோடிக்கரை வழியாக வருகின்ற தண்ணீர்தான் சனத்குமார் நதியாக செல்கிறது.
தற்பொழுது சனத்குமார் நதி சாக்கடை கால்வாயாக மாறி உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி நகரப் பகுதியில் இருந்து செல்லும் சாக்கடை தண்ணீரையும், இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில் இருந்து வரும் சாக்கடை தண்ணீரையும் நேரடியாக சனத்குமார் நதியில் இணைத்துள்ளார்கள்.
எனவே நகராட்சியும் பஞ்சாயத்து நிர்வாகமும் சாக்கடை கால்வாயில் வரும் கழிவு நீரை தனி கால்வாய் அமைத்து தூய்மைப்படுத்திய பின்னர் சனத்குமார் நதியில் விட வேண்டும்.
சனத்குமார் நதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.