உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம்

Published On 2023-04-14 09:29 GMT   |   Update On 2023-04-14 09:29 GMT
  • வருடம் தோறும் 22 நாட்கள் வெகு சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  • விநாயகர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதும் ஆகும். இந்தக் கோவிலில் வருடம் தோறும் 22 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் உபயத்தில் பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடங்களை தங்கள் தலையில் சுமந்தவாறு ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம் வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று காலை 11 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜையும், பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு கோத்தகிரி மகளிர் மன்றம் நடத்தும் திருவிளக்கு பூஜையும், 6 மணிக்கு அக்கினி கம்பம் பூச்சாட்டுதல் நடைபெறுகிறது.

Tags:    

Similar News