தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
- தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது.
- வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவோணம்:
ஒரத்தநாடு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்று வருவதாக ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் தீவிர விசரணை நடத்தினர்.
விசாரணையில் ஒரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 50) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்று வந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று சண்முகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, லாட்டரி சீட்டு, செல்போன் மற்றும் 900 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக சண்முகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்று சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரத்தநாடு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.