உள்ளூர் செய்திகள்

சிறந்த குடிமகன் விருது பெற்ற டாக்டர் பிரபாகரன்.

தஞ்சாவூர் ஆராய்ச்சியாளருக்கு சிறந்த குடிமகன் விருது

Published On 2023-11-01 09:59 GMT   |   Update On 2023-11-01 09:59 GMT
  • போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.
  • தொழில்நுட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர் பிரபாகரன். இவர் மருத்துவத்தில் பிஎச்.டி. முடித்து விட்டு தற்போது தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணம் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் கதிரியக்க புற்று நோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க "சிறந்த குடிமகன் விருது" இவருக்கு கிடைத்துள்ளது. கொரிய குடியரசின் சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்நிலையத்தில் 78-வது போலீஸ் தின கொண்டாட்டத்தின் போது குரல்ஃபிஷிங்கிற்கு எதிராக இவர் தன்னார்வத் தொண்டு புரிந்தார். இந்த பங்களிப்பிற்காக கொரிய தேசிய போலீஸ் ஏஜென்சியில் இருந்து சிறந்த குடிமகன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்துறை தலைவர் ஹாங்சி யோக்ஜி, துணை காவல் ஆணையர் ஆகியோரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழும் நினைவுப்பரிசும் டாக்டர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது.

விருதுக்காக பரிந்துரை செய்த வெளியுறவுப் பிரிவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லீசியோஹூன்கிற்கு டாக்டர் பிரபாகரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

டாக்டர் பிரபாகரன் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் அமைப்பு தலைவராக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், குரல்ஃபிஷிங்தடுப்பு, போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார் .

அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு இந்திய தூதரகத்துடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக தென் கொரியா சென்றபோது தன்னார்வலராக பணி செய்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உயிர் தொழில்நு ட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News