உடன்குடியில் வெற்றிலை- பாக்கு விற்பனை மும்முரம்- ஒரு கிலோ கட்டு ரூ.242-க்கு விற்பனை
- தற்போது உடன்குடிக்கு தேவையான வெற்றிலை, வெளியூரில் இருந்து வருகிறது.
- சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதால் ஒரு கிலோ வெற்றிலை ரூ. 242-க்கு விற்பனையாகிறது.
உடன்குடி:
உடன்குடி கருப்பட்டிக்கு எவ்வளவு பெயர் இருக்கிறதோ அதை போல உடன்குடி வெற்றிலைக்கும் பெயர் இருந்தது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உடன்குடியில் இருந்து தினசரி 500 கிலோ வெற்றிலை வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு உடன்குடி வெற்றிலை என்ற ஊர் பெயரோடு சென்றது.
அது நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து தற்போது உடன்குடிக்கு தேவையான வெற்றிலை, வெளியூரில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
உடன்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடல் நீர் புகுந்து, விவசாய நிலம் எல்லாம் உவர்ப்பு நிலமாக மாறியது. இதனால் வெற்றிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது உடன்குடியில் ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றிலை உற்பத்தியாகிறது. ஒரு கிலோ வெற்றிலை ரூ. 180 ஆக நீண்ட நாட்களாக இருந்தது.
தற்போது கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடந்து வருவதால் கிடுகிடு என ஏறி தற்போது ஒரு கிலோ வெற்றிலை ரூ. 242-க்கும், ½ கிலோ ரூ. 121-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல கொட்ட பாக்கு ஒன்று ரூ. 5-க்கும் விற்கப்படுகிறது. கொட்டபாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கலந்து சாப்பிட்டால் உணவு ஜீரணமாகும் என்று சொல்லப்படுகிறது.
உடன்குடி வெற்றிலை சங்கத்தில் இந்த மூன்றும் விற்பனை மும்முரமாக நடக்கிறது.