பா.ஜ.க. அரசும், பிரதமரும் இந்தியா என்ற பெயரை கேட்டாலே பீதியடைகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது
- நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார்.
கடலூர்:
நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மகன் திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் மகன் திருமண விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. மாநாடு போல இந்த சுயமரியாதை திருமணம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெய்வேலி தொகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா என்ற பெயரை கேட்டாலே பயந்து பீதியடைகின்றனர். இதனால் பாரத் என்ற பெயரை பா.ஜ.க. தூக்கிப்பிடிக்கிறது. ஜீ 20 மாநாட்டை நடத்துவதில் ஆர்வம் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மக்களை பற்றி கவலைப் படாமல் உள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக சிதைந்து கிடக்கிறது. இதில் பல அணிகள் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.