குண்டும், குழியுமாக காணப்படும் பிளிச்சி ஊராட்சி சாலைகள்
- கணபதி நகர் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- 2019-2020ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 2-வது வார்டுக்குட்பட்ட கணபதி நகர் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த 2019-2020ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது தார்சாலை அமைப்பதற்காக சாலைகள் சமன்படுத்தி அதன் மேல் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின் இப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் நிலுவையில் உள்ளது.
இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டுனர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-
கடந்த 3 ஆண்டுகளாக மேலாக இப்பகுதியில் தார் சாலை பணி தொடங்கி இன்று வரை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள து. இதனால் மழைக்கா லங்களில் இச்சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் சாலைப் பணிகள் முடிந்து இதற்கான முழு தொகையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.