உள்ளூர் செய்திகள்

சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி ேபாராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-23 06:15 GMT   |   Update On 2022-11-23 06:15 GMT
  • ஓமலூரில் இருந்து சங்ககிரி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
  • திடீரென தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாரமங்கலம்:

ஓமலூரில் இருந்து சங்ககிரி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தாரமங்கலம் நகராட்சி 27 -வது வார்டு பொதுமக்கள் 100- க்கும் மேற்பட்டோர் சம்பவத்தன்று காலை திடீரென தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாக்கடை வசதியின்றி அவதிப்பட்டு வருவதாகவும், மழைகாலங்களில் நகர பகுதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரும், சாக்கடை கழிவுகளும் கலந்து குடியிருப்பு வீடுகளில் புகுந்தும் தேங்கியும் வருவதால் இங்கு கடந்த 2 மாதங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறோம் எனவும்,  இந்த நிலையை போக்க இந்த பகுதியில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு சாக்கடை அமைத்து தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறினர்.

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன், 27 வது -வார்டு கவுன்சிலர் லட்சுமிஈஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர்கள் காமராஜ், முரளிதரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சாக்கடை பணிக்கு உண்டான ஒப்பந்தம் பெறப்படவில்லை என்றும், தற்போது சாலை விரிவாக்க பணிக்கு மட்டுமே பணி நடைபெறுவதால் சாக்கடை பணியை மேற்கொள்ள இயலாது என்று கூறியதால் பொதுமக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். சாலை விரிவாக்க பணி முடிந்து விட்டால் சாக்கடை பணியை கிடப்பில் போட்டு விடுவார்கள் என்றும், புதிய சாக்கடை அமைக்காமல் சாலை பணியை மேற்கொள்ள விடமாட்டோம் என்று கூறினர்.

இதையடுத்து சாலை விரிவாக்க பணியை தற்காலிகமாக பணியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News