கொடைக்கானலில் ஆமை வேகத்தில் நடக்கும் படகு இல்ல மேம்பாட்டுப்பணி - சுற்றுலா பயணிகள் அலைக்கழிப்பு
- நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தை மேம்படுத்தும் பணியானது பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
- படகு இல்லத்தில் குப்பைகளை குவித்து வைத்தது போல் காட்சி பொருளாகவே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தமிழக சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கூடும் மையப்பகுதியாக நட்சத்திர ஏரி விளங்கி வருகிறது. ஏரியில் சுற்றுலாத்துறை சார்பில் 2 படகு இல்லங்களும், நகராட்சி சார்பில் ஒரு படகு இல்லமும் இருந்து வந்தது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சுவாரி செய்து மகிழ்ந்து செல்வர். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தை மேம்படுத்தும் பணியானது பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவாக நடைபெற்று வந்த பணிகள் முடிவு பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொடைக்கான லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அலை க்கழிப்புக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் படகு இல்லத்தில் குப்பைகளை குவித்து வைத்தது போல் காட்சி பொருளாகவே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . எனவே நகராட்சி படகு இல்லத்தை விரைந்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து ள்ளது.