உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வுக்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு

Published On 2023-01-08 08:50 GMT   |   Update On 2023-01-08 08:50 GMT
  • உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • வினாத்தாள்கள், மாதிரித்தேர்வுகள், பாடக்குறிப்புகள் ஆகியவை உள்ளன.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சிகள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடியே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மெய்நிகர் கற்றல் வலைதளம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. அனைத்து போட்டித்தேர்வுக்கான விவரங்களை இணையதளம் உள்ளடக்கியது. போட்டித்தேர்விற்கான பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், மாதிரித்தேர்வுகள், பாடக்குறிப்புகள் ஆகியவை உள்ளன.

மெய்நிகர் கற்றலுக்கான இணையத்தளத்தில் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் பாடக்குறிப்புகள் மற்றும் வினாத்தாள்களை இலவசமாக பதிவு செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இத்தளத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டி தேர்வாளர்கள் பயன்பெறலாம். மேலும் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கப்பட்டு ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள், போட்டித் தேர்வு வகுப்புகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் கல்வி தொலைக்காட்சியில் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு மாலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News