விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
- போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது.
- சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி பிடித்தது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 63-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும், 2-வது இடத்தை ஏ.எம். பட்டி ரவி மாட்டு வண்டியும், 3-வது இடத்தை ஓட்டப்பிடாரம் கணேசன், சக்கம்மாள்புரம் தாவீது மாட்டு வண்டியும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 38 வண்டிகள் கலந்து கொண்டன. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கிராம சமுதாய தலைவர் முருகன், செயலாளர் செல்வம், பொருளாளர் முத்துப்பாண்டி, துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.