வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்களுக்கு பஸ் வசதி-கலெக்டர் அருணா அறிவுறுத்தல்
- ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 4-ந்தேதி நடக்கிறது
- மாணவர்களிடம் கல்வி நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு வேலைவாய்ப்பு மையம் சார்பில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வருகிற 4-ந்தேதி தனியார் நிறுவ னங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூடத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-
ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், அரசினர் வேலை வாய்ப்பு மையம், ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் வருகிற 4-ந்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.
எனவே நீலகிரி கல்லூரிகளில் படித்து முடித்த மாணவ-மாணவிகள் மேற்கண்ட முகாமில் பங்கேற்க ஏதுவாக அந்தந்த கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் இளைஞர்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மேற்கண்ட முகாம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
அங்கு குடிநீர் வசதி மற்றும் துப்புரவு பணிகளில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஊட்டி தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மண்டல வேலைவாய்ப்பு மைய இணை இயக்குநர் ஜோதி மணி, உதவி இயக்குநர் சாகுல்ஹமீது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சண்முகசிவா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.