இலுப்பநத்தம் ஊராட்சியில் பஸ் வசதி தொடக்கம்
- மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
- மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இலுப்ப நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6-வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனிடையே இப்பகுதியில் இருந்து சென்று வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், மனுவாக ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு வழங்கினர்.
ஆனால் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய வசதி இல்லாததால் ஆட்டோவில் கூட செல்ல முடியாமல் நடந்தே செல்லும் நிலை உருவாகியது.
எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி அதன் எதிரொலியாக இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மூக்கனூர் வழியாக சென்ற அரசு பேருந்து அண்ணா நகர், வெங்கட்ராமபுரம் வழியாக எஸ்.புங்கம்பாளையம் அரசு பள்ளி வழியாக காலை 8 மணிக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோன்று மாலை 4 மணிக்கு இதே வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.