மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட், முட்டைகோஸ் விலை வீழ்ச்சி
- உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் தவிப்பு
- காய்கறி விவசாயிகள் வேதனை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு கேரட், முட்டைகோஸ், உருளை கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் உள்ளூர் மட்டுமின்றி நீலகிரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள், உருளைகிழங்கு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகிறது.
ஊட்டி, பாலாடா, கேத்தி, கோத்தகிரி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கேரட் விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு கேரட் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேரட்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த 3 மாத காலமாகவே கேரட்டின் விலை தொட ர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு கேரட் விலை அதிகமாக இருந்த தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டும், அதேபோன்று விலை இருக்கும் என்பதால் விவசாயிகள் அதிகமாக கேரட் பயிரிட்டனர்.
இதனால் விளைச்சல் அதிகமாகி மார்க்கெட்டிற்கு வரத்தும் அதிகமானது. இதன் காரணமாக கேரட்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
வழக்கமாக இந்த சமயங்களில் ஒரு கிலோ கேரட் ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை.விலை வீழ்ச்சியை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் லாபம் இல்லை. வியாபாரிகளுக்கு பெரிதாக லாபம் இல்லை.
வழக்கமாக 200 டன் வரத்து வரும் நிலையில், 300 முதல் 500 டன் வரை வரத்து வருகிறது. வரத்து குறைந்தால் தான் விலை அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறும் போது, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி காய்கறி மண்டியில் கமிஷன் என அனைத்தும் போக விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. கேரட் அறுவடை செய்து உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது சிறு, குறு விவசாயிகள் தான் என்றார். இதேபோல் மார்க்கெட்டிற்கு முட்டை கோஸ் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.