உள்ளூர் செய்திகள் (District)

காப்புக்காட்டில் விதியைமீறி சாலை அமைப்பு- சுற்றுலாத்துறை அமைச்சர் மருமகன் உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2023-04-20 09:12 GMT   |   Update On 2023-04-20 09:12 GMT
  • வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.
  • தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் மேடநாடு என்ற இடத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

சிவக்குமார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மருமகன் ஆவார்.

இந்த நிலையில் இவரது தோட்டத்திற்கு சாலை இணைப்ைப ஏற்படுத்தும் வகையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 2 கி.மீ தூர தொலைவுக்கு சாலை பணி நடந்தது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.

மேலும் தோட்ட மேலாளர் பாலமுருகன், கனரக வாகன டிரைவர்கள் உமர் பாரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அங்கிருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. விதிகளை மீறி காப்புக்காட்டில் சாலை அமைத்ததாக ஏற்கனவே 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தோட்ட உரிமையாளரும், அமைச்சரின் மருமகனுமான சிவக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, மேடநாடு காப்புக்காட்டில் விதிகளை மீறி சாலை அமைத்ததற்காக தோட்ட உரிமையாளரான சிவக்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிவக்குமாரை முதல் குற்றவாளியாக சேர்த்து ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News