பாளையில் டிராக்டரில் கழிவுகள் கொண்டு வந்த 2 பேர் மீது வழக்கு
- பாளை மண்டலத்துக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் டிராக்டரில் பிளாஸ்டிக், பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக மூட்டைகளில் கொண்டு வந்தனர்
- உடனே டிராக்டரில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் டிராக்டரில் பிளாஸ்டிக், பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக மூட்டைகளில் கொண்டு வந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று டிராக்டரை சிறை பிடித்தனர். உடனே டிராக்டரில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் பாளை சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவ கழிவுகளை கொட்டி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மேலும் அதனை கொண்டு வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். அதில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்தது நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வாநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தளவாய் (வயது 35)மற்றும் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கைலாசம் (37)என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.