கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது- அன்பில் மகேஷ்
- பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது.
- மத்திய அரசு நிதி வழங்காததால் தமிழக அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது.
புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் 'கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது' என திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விட குறைவான நிதியையே மத்திய அரசு கொடுக்கிறது. மத்திய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.