திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி அதிரடி உத்தரவு
- பள்ளி வளாகங்களை, வகுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
- மாவட்டத்தில் பராமரிப்பில்லாத அரசு பள்ளி கட்டமைப்புகள் சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
திருப்பூர்,
கொரோனா தொற்றுக்கு பின் மீண்டும் பள்ளிகள் பிப்ரவரி 1-ந்தேதி முதல் துவங்கின. மே மாதம் அனைத்து பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் 2022-23ம் கல்வியாண்டு வரும் 13-ந் தேதி துவங்குகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) திருவளர்ச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 183 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து முதன்மை கல்வி அதிகாரி பேசியதாவது :-
மாணவர்கள் பாதுகாப்பாக உணரும் விதமாக, பள்ளி வளாகங்களை, வகுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.வகுப்பறைகளை கிருமி நாசினி தெளித்துதூய்மையாக பராமரிக்க வேண்டும். எந்த வகையிலும் மாணவர் சேர்க்கை குறையவிடக்கூடாது. அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
மாணவர், ஆசிரியர் சார்ந்த தகவல்கள், தளவாட பொருட்கள், கழிப்பிட வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட தகவல்களை 'எமிஸ்' தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றுங்கள். இனி வரும் காலங்களில்இதனடிப்படையிலே நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் பராமரிப்பில்லாத அரசு பள்ளி கட்டமைப்புகள் சீரமைக்க பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் இதற்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் சிதிலமடைந்துள்ள கட்டடங்களை அகற்றுதல், கூடுதல் கழிப்பறை கட்டுதல், வகுப்பறை மேற்கூரைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.