உள்ளூர் செய்திகள்

நல்லிணக்க கூட்டணியை முதலமைச்சர் வழி நடத்தி செல்கிறார்- திருமாவளவன் பேச்சு

Published On 2023-01-08 16:45 GMT   |   Update On 2023-01-08 16:45 GMT
  • ஆளுநர் ஆர்.என். ரவி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போன்று செயல்பட்டு வருகிறார்.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விற்கு சமூக நீதி தொடர்பான அனைத்து முயற்சிக்கும் ஒத்துழைப்பு தருகிறது.

நெல்லையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆளுநர் ஆர்.என் ரவி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பணிகளை மேற்கொள்ளலாம். அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறார்.

தமிழ்நாடு என்றாலும், தமிழகம் என்றாலும் ஒன்று தான், என்று கூறி தமிழ்நாடு என்ற சொல்லுக்கு தவறான தோற்றத்தை உருவாக்குகிறார்.

ஆந்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ் என்றாலும் நாடு என்று தான் பொருள். உத்தரபிரதேஷ், மத்திய பிரதேஷ் இந்த மாநிலத்திற்கு சென்று பிரதேஷ், ராஷ்டிரா என்று இருக்கிறது என சொல்லுவாரா?

தமிழ்நாடு, வட மொழியில் ராஷ்டிரம் என பொருள். வேண்டுமென்றே பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டுமென அதற்கு எதிரான கருத்து தோற்றம் உருவாக்க விரும்புகிறார்.

சட்டப்பூர்வமாக காமராஜர் காலத்திலேயே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அண்ணா காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புகையோடு தமிழ்நாடு என்ற சொல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். தி.மு.க. அரசின் கொள்கைக்கும், திராவிட அரசியல் கோட்பாட்டிற்கும் கவர்னர் எதிரானவர்.

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த அந்த அநாகரிகமான செயல் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். நாட்கள் கடந்து விட்டது. எனவே அவர்களை கைது செய்ய வேண்டி வருகிற 11-ந் தேதி (புதன் கிழமை) அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

நல்லிணக்க கூட்டணியை முதலமைச்சர் வழி நடத்தி செல்கிறார். பொது மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செய்கிறார்.

தலித் வன்கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். வன்கொடுமையை தடுக்க வழிகாட்டி தருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விற்கு சமூக நீதி தொடர்பான அனைத்து முயற்சிக்கும் ஒத்துழைப்பு தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News