நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா திடீர் ஆய்வு
- கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
- 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.
மாமல்லபுரம்:
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 1516.82 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில், அமைக்கப்பட்டு வரும் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலையின் கட்டுமானப் பணிகளை நேற்று தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொண்டு வரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குடிநீரை, விநியோகம் செய்வதற்காக, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது., இப்பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆலையில் இருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளுக்கு வழங்கப்படும்.
இதனால் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என தலைமை செயலாளர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளர் வைதேகி, செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.