கோவையில் தண்ணீர் சேமிப்பு குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்
- கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
- 55 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது/ தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்ட்டுள்ளது உள்ளது.
அதனை சரி செய்ய அரசு நிர்வகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-
கோடைக்காலம் தொடங்கி விட்டதால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தண்ணீர் கிடைக்கும் வழி, சேமிக்கும் விதம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே வருங்காலத்துக்கான தண்ணீரை நம்மால் சேமிக்கவும், பயன்படுத்தவும் முடியும்.
குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங் களில் ஒவ்வொரு வீட்டுக்கும் 55 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வீட்டுக்கழிவுகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு, மழை நீர் சேமிப்பு, வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைப்பது குறித்து பேசப்பட்டது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சிறுவாணி அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.