சித்தோடு அருகே 800 கிலோ தங்க நகைகளை கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
- விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி இரவு செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் தங்க நகைகளை கொண்டு செல்லும் தனியார் வேன் சென்று கொண்டிருந்தது.
வேனை சசிகுமார் என்பவர் ஓட்டி வந்தார். தனியார் பாதுகாவலர் பால்ராஜ் என்பவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உடன் வந்து கொண்டிருந்தார். வேனில் பல்வேறு தங்க நகைக் கடைகளில் பெறப்பட்ட 800 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.666 கோடியாகும்.
இந்த வேன் நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தங்க நகைகளை கொண்டு வந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தங்க நகைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த வேனை பத்திரமாக மீட்டு சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதேப்போல் விபத்தில் காயம் அடைந்த சசிகுமார், பால்ராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மற்றொரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 800 கிலோ தங்க நகைகள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.