மேட்டுப்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டர் கசிவு
- பொதுமக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது.
- பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
பின்னர் அங்குள்ள சாமான்ன தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து 33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும்.
இந்த நிலையில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய குளோரின் சிலிண்டரை அங்குள்ள ஊழியர்கள் திறந்தனர். அப்போது அது பயங்கர சப்தத்துடன் வெடித்து குளோரின் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர்.
இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கசிவினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது,குளோரின் சிலிண்டரில் அடிக்கடி சிறிய அளவில் கசிவு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் தற்போது அது பெரிய அளவில் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதித்து உள்ளனர். நகராட்சி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கவில்லை என்றனர். பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.