உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சித்தையன்கோட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-08-22 04:37 GMT   |   Update On 2023-08-22 04:37 GMT
  • 3-வது வார்டு பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
  • அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பகுதியில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலை ஓரமாக கொண்டு செல்லப்பட்ட குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சரி செய்யப்பட்டு அவ்வப்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 3-வது வார்டு பகுதிக்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிதண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

எனவே உடனடியாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி சித்தையன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பேரூராட்சி அலுவலர்கள் குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News