உள்ளூர் செய்திகள்

கோவையில் 18 மையங்களில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு

Published On 2023-05-28 09:14 GMT   |   Update On 2023-05-28 09:14 GMT
  • முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
  • அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

கோவை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டு தோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி இந்த ஆண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று நடந்தது.

கோவை மாவட்டத்தில் 7,742 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 18 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் முதல் தாள் பொது அறிவு தேர்வு நடந்தது. மதியம் 2-ம் தாள் திறனறிவு தேர்வு நடக்கிறது.

தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். நேரம் கடந்து வந்தவர்களை மைய கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர். இதனால் வெகுதொலைவில் இருந்து வந்த பலர் தேர்வு எழுத முடியாமல் போனது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரிகள் 18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தேர்வையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வர்கள் மையங்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News