உள்ளூர் செய்திகள்

கோவையில் நாளை 18 மையங்களில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு

Published On 2023-05-27 09:16 GMT   |   Update On 2023-05-27 09:16 GMT
  • 18 தேர்வு மையங்களுக்கு 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேர்வு மையங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

கோவை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வு கோவை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7,742 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் மிகுந்த கவனத்துடனும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுகிறது.

இத்தேர்வினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 18 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறைகண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் மொத்தம் 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

மேலும், தேர்வை பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை இயக்குநர் நிலையில் அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரும் தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடை பெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண் டம்பாளைம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் காந்திபுரம் போன்ற புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும் வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வர்களுக்கும் பேருந்து வசதிகள் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுடன் வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News