உள்ளூர் செய்திகள்

லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்.

ஆழ்வார்திருநகரி அருகே மணல் அள்ளுவதாக கூறி வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்

Published On 2023-10-31 08:02 GMT   |   Update On 2023-10-31 08:02 GMT
  • ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்காமல் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து மண்ணை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளியுள்ளனர்.
  • இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

தென்திருப்பேரை:

திருச்செந்தூரில் இருந்து வி.எம்.சத்திரம் வரை தொழில் வழிச்சாலைத் திட்டப்பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தடுப்புச்சுவர்

இதற்காக சாலை கள் இருபுறமும் அகலப்படு த்தப்பட்டு, ஒரு புறம் திருச்செந்தூருக்கு பாதை யாத்திரையாக செல்லும் பக்தர்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் அருகில் தாமிரபரணி ஆறு செல்வதால் ஆங்காங்கே தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்காமல் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து மண்ணை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இந்த பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், மணல் அள்ளுவதற்காக மட்டுமே இந்த பணிகள் நடந்து வருவதாக கூறி மணல் அள்ளிய ஜே.சி.பி. மற்றும் லாரிகளை சிறைபிடித்து தங்கள் ஊருக்குள் நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் நிர்மலா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இங்கிருந்து அள்ளப்பட்ட மணல் அனைத்தையும் இங்கேயே கொட்டிவிட்டு தடுப்புச்சுவர் முறையாக அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News