நான்கு வழிச்சாலை பணிக்காக அகற்றம்- மறு நடவு செய்த மரங்கள் முறையாக பராமரிக்கப்படுமா?
- நான்கு வழிச்சாலை பணிகளுக்காக சாலையோரங்களில் இருந்த சுமார் 1200 பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறு நடவு செய்யப்பட்டது.
- மறு நடவு செய்த உடன் துளிர்விட்டு வளர்ந்த மரங்கள் பல காய்ந்து காட்சிப் பொருளாய் நிற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி:
நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக சாலையோரங்களில் பசுமை காடுகள் போல் காட்சியளித்து வந்த சுமார் 1200 பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறு நடவு செய்யப்பட்டது.
இதற்காக அரசு சார்பில் நிதியும் செலவிடப்பட்டது. இருப்பினும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் முதல் தென்காசி வரையிலான இடைப்பட்ட பகுதிகளில் மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மறு நடவு செய்த உடன் துளிர்விட்டு வளர்ந்த மரங்கள் பலவும் தற்போது எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளப்படாததால் சாலையின் இருபுறங்களிலும் காய்ந்து காட்சிப் பொருளாய் பரிதாப நிலையில் நிற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது எஞ்சி இருக்கும் ஒருசில துளிர்விட்ட மரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.