பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்பட வேண்டும்- நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் பேச்சு
- வருகிற 20-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வார விழா கொண்டாட ஏற்பாடு
- அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் 70-வது வார விழா தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.
தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க. வாஞ்சிநாதன் தலைமை தாங்கி கூட்டுறவு கொடியை ஏற்றிவைத்தாா்.
இதையடுத்து அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனா். விழாவில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் வாஞ்சிநாதன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியை இலக்காக வைத்து கூட்டுறவு அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றாா்.
விழாவில் சரக துணைப்பதிவாளா் மது, கூட்டுறவு துறை அலுவலா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், கூட்டுறவாளா்கள், சங்க உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவில் கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது. இதே மண்டபத்தில் இலவச ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
எடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் கல்வித் திட்டம் சனிக்கிழமையும், கப்பாலாபணியா் நல நிலக் குடியேற்ற கூட்டுறவு பண்ணை சங்கத்தில் மரக்கன்று நடும் விழாவும், ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட விழா நிகழ்ச்சிகளும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.